Friday, June 24, 2016

கட்டிப்பிடித்தலும் முத்தமும்

அப்பா இறக்கும் போது எனக்கு சுமார் 15 வயது இருந்திருக்கலாம். அவன் இறக்கும் 5 நிமிடங்களுக்கு முன்னர் வரை அவன் மீது காலும் கையும் போட்டு தூங்கியதாய் தான் ஞாபகம். "மொப்ப மாதிரி வளந்திருக்கே...இன்னுமாடி அந்த ஆம்பள மேல கால் போட்டு தூங்குறே?" என்று பெரியம்மா கூட திட்டி இருக்கிறாள். "இந்தாரு...அது என் அப்பா. நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன், எப்பிடி வேணும்னாலும் தூங்குவேன். சொல்லிவை உங்கொக்கா கிட்ட" என்று அம்மாவை கன்னத்தில் குத்தி மிரட்டி இருப்பேன்.

என்னை முழுக்க முழுக்க ஆண் மகனாய் பாவித்து அழகு பார்த்தவன் அவன். "என் பொண்ணை கராத்தே கிளாசில் போடப் போறேன். என் பையனை பரதநாட்யம் கிளாசில் போடப் போறேன்" -ன்னு கூறிப் பெருமைபட்டுக் கொள்வான்.

"Be a Roman when you are in Rome"- அப்படின்னா என்னப்பா என்று கேட்டதற்கு, "எல்லாரும் கிணத்துல விழுந்தா, நீயும் விழணும்னு இல்ல. நீ வித்தியாசமாய் வாழ்ந்து காட்டலாம்-" ன்னு ஒரு புது கதையைக் கட்டுவான். குறும்புக்காரனும் கூட.

விஜய் மல்லையாவை அந்த காலத்திலேயே எனக்கு அறிமுகப்படுத்தியவன். "அட...சொர்கம் வைன்ஸ் (Wines) ரமணன் பொண்ணா நீ? " என்று யாராவது என்னை வினவினால் அதீத கோவம் வரும் எனக்கு. "எங்க அப்பா இப்போ ஹோட்டல் பிஸினஸ் தான் பண்ணுறாரு" என்று வெட்டிக் கொள்வேன். இப்போதெல்லாம் யாரேனும் என்னை இராஜபாளையத்து வீதிகளில் கண்டு கொண்டு அதே கேள்வியை மறுபடியும் கேட்க மாட்டார்களா என்று ஏங்குகிறேன்.

பஞ்சு, லிக்கர், நிலக்கரி, ஹோட்டல் என்று பற்பல பிஸினெஸ்களில் இறங்கி நட்டம் கண்ட போதுகூட கொஞ்சமும் கெத்து குறையாமல் கடைசி வரை ஹாஸ்யமாய் பேசியே அனைவரையும் சிரிக்க வைத்து அழகு பார்ப்பான்.

நன்கு இருட்டிய ஒரு மாலை வேளையில் நானும் அவனும் வீதியில் நடந்து கொண்டிருக்க, ஒரு பாட்டி அப்பாவைக் கட்டித் தழுவி, அவன் கன்னமெல்லாம் வாஞ்சையாய் தடவி, "வீட்டுக்கு வாங்க ராசா. %Beep% ஐயா நல்லா இருக்காஹலா?" என்று இன்னமும் என்னன்னவோ பேசி எனக்கும் அவருக்கும் கலர் சோடா வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார்.

"யாருப்பா இது?"

"இவளா...இவ தான் 40 வருஷத்துக்கு முன்னாடி $Beep$ அவுகளோட Keepu"

" Keep-னா?"

சட்டென ஏதோ நினைவு வந்தவனாய்..."Keep-னா...இவங்க நிறைய சோடா வச்சிருப்பாங்களா...அதனால தான் அவங்க Keep." ஏதோ உளறி பேச்சு மாற்றினான்.

அன்று எட்டு படித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த ஒலக அறிவெல்லாம் கொஞ்சம் கம்மி தான். அன்றிலிருந்து அந்த "Keep சோடா" பாட்டி என்னையெங்கு காணினும் "கலர் குடிக்கிறியா கண்ணு? ஏத்தா எங்க வீட்டுலே கலர் குடிச்சா உங்க அம்மா வையாது. செத்த இத்துனூண்டு குடிச்சிட்டு போ!" ன்னு உசுரு வாங்கிடும்.

அப்பா கண்ணை மூடி எத்தனையோ வருசமாச்சு. அவன் ஞாபகம் என்னவோ கூடிட்டே தான் போகுது. எனக்கு குழப்பம் -ன்னு வர்றப்போ ஐடியா குடுக்க அப்பா இல்லையே என்று தான் கண்ணீர் பீறிடும். "Gops. I am Ramana thaatha. I love you Gops" என்று என் பையன் தான் அப்போப்போ என்னைத் தட்டுவான். "எங்கப்பா மட்டுந்தாண்டா என்னை 'Gops'-னு கூப்டுவாரு" என்று நான் என்றோ சொன்னதை நல்லாவே மனதில் நிறுத்திக் கொண்டான் போலும். என்னில் முக்கால் வாசி வளர்ந்த என் குட்டி அப்பன் அவன்.

இப்போது அயர்ந்து தூங்குகிறான் பாவம். தாய் மாமனோடு விளையாடிய களைப்பு. அவன் மேல், அவனுக்கு வலிக்காதவாறு மெல்ல கால் போட்டு அவன் நெத்தியில் முத்தமிட்டு தூங்க வேண்டும் இந்நேரம்.

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்...மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கும் தெரியும் முத்தம் காமத்தைச் சார்ந்தது அன்று என்று.

இது எடுத்தது அக்டோபர் 2000-னு நினைக்கிறேன் 

Wednesday, September 2, 2015

அன்லிமிடட் ஆந்திரா மீல்ஸ் - பகுதி 1

சமீபத்திய சேதிகள்: 

முடியலீங்க! என்னால தாங்க முடியல ஆமா. ஆறு மாசமா இந்த ப்ளாக் (Blog) பக்கம் வரல தான். ரைட்டு! அதுக்காக இப்படியா? தினமும் என்னோட பதிவுக்கு 10 லைக் போடுறது, 5 கமெண்ட் போடுறது, "ஹலோ லொள்ளு, நீங்க எழுதாம இருந்தா நான் தற்கொலை பண்ணிப்பேன்"-னு மொட்டை ஈமெயில் அனுப்புறது-ன்னு உங்க இம்சை தாங்கலங்க. அட...ச்சே இந்த "பிரபல பதிவாளார்"-ங்குற அந்தஸ்து வந்துட்டாலே இது தாங்க பிரச்சனை...(ஹி..ஹி..அந்த 'பிரபலம்' நான் தாங்க!!) 

ஏய் ... ஏய் ..மிஸ்டர்..அதிகாரி-னு சொன்னது என்னை

அட...வித்தியாசமாய் எதுவும் நடந்துடலங்க. சுத்தியும் அதே பர்கர் திண்னிப் பயலுக, அதே பொழப்பு, அதே இத்துப் போன கோடு(Code), அதே ரோடு-ன்னு ரொம்ப நார்மலா தாங்க போகுது வாழ்க்கை. ஆனாலும் சுவாரஸ்யம் பஞ்சமில்லாம ஓடுதுங்க. இந்த ப்ளாக் பக்கம் அடிக்கடி வர்றதை பழக்கப்படுத்திக்க தாங்க இந்த 'அன்லிமிடட் ஆந்திரா மீல்ஸ்' தொடர்பதிவு முயற்சி. சென்னை சோழிங்கநல்லூர் ஏரியா-வுலே அஞ்சு வருஷம் வேலை பாத்ததுலே ஹாப்பியோ ஹாப்பியாக இருந்த இடம் தெருவுக்கு தெரு இருந்த எங்க ஊர் ஆந்திரா-மெஸ் தாங்க. அதனாலேயே அது தலைப்பு! 

மொதல்ல பப்பு பொடி சாதம்!


இன்னாது காந்தி பூட்டாரா?

அட..இந்த கஷ்டமான கோவாலு பாஷை (COBOL) கூட எனக்கு அப்போப்போ புரிஞ்சுடும்ங்க. ஆனா பாருங்க, இந்த ​​Sheena Bora கேஸ் தாங்க நமக்கு தலையும் புரியல, காலும் புரியல. ஷீனா-க்கு இந்திராணி அம்மாவா? பாட்டியா? இந்திராணிக்கு எத்தனை புருஷன்க ? ஷீனா ஏன் அவளோட சகோதரன் கிட்ட போய் தப்பா நடந்துக்கணும்? இன்னாது ஷீனா சாகலையா? இன்னும் அமெரிக்கா-லே தான் இருக்கா?-ன்னு ஏகப்பட்ட இடியாப்ப சிக்கல்கள் இந்த கேஸ்-லே. விஜய் டிவி-இலே Airtel Super Singer-தவறாது பார்க்கும் எங்க ஊட்டுக்கார் கூட இப்போ எல்லாம் அதை விட்டுட்டு, இந்த செய்தியை தாங்க பாக்குறாரு!எது எப்படி இருந்தாலும் அந்த ஷீனா photo பாக்குறப்ப மனசுக்கு ரொம்பவே கஷ்டமா தாங்க இருக்கு. 

சமீபத்திய எரிச்சல்:

பொதுவாகவே ரீமிக்ஸ் பாடல்களிலோ சீன்களிலோ அதிக நாட்டமில்லை எனக்கு. பரோட்டா சூரி சமீபத்தில் நடித்த படம் 'சகல கலா வல்லவன்'. அதில ஊர்க்காரர் ஸ்டைல்-லே வெட்டி சட்டையோடு வரும் அவரோட இன்ட்ரோ பாடல், தேவர் மகன் படத்தில் வரும் "வானம் தொட்டுப் போனா" பாடல். குஷ்டகாலம் டா சாமி!

இந்தப் பாடு கேட்கும் போதெல்லாம் சிவாஜி ஐயா-வின் நினைவுகள் இதமாய் யாருக்கும் வருவதுண்டு. அந்த பாட்டை ஏன்யா இந்த படத்துல வரும் காமெடி நடிகனுக்கு போட்டு இருக்கீங்க? அந்த சீன்-க்கு அப்புறம் அந்தப்படம் பாக்கும் ஆசையே விட்டுப் போச்சு! பிரபுவின் பையன் அமிதாப் பச்சனைப் பார்த்து எங்க தாத்தா மாதிரி இருக்கீங்கனு சொன்னதை விட கொடுமையா இருக்கு இது. 

இந்த வார விருது!

விவேகானந்த் செல்வராஜ். பயபுள்ளையும் நானும் நேத்து வரைக்கும் ஒரே ஸ்கூல்லே தான் படிச்சிட்டு இருந்தோம். இன்னிக்கு பாத்தா நம்ம பய  ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 39-ஆவது இடத்தையும், தமிழக இடத்தில் 4-ஆவது இடத்தையும் பெற்று சாதனை படைத்து உள்ளானாம். என்னம்மா அசத்துறான்! வாழ்த்துக்கள் விவேக். இந்த 'சாதனையாளன்' விருது உனக்கு தான். (ஏதோ நம்மால முடிஞ்சது!) தொடரட்டும் உன் நற்பணி!


பல்புகள் பலவிதம்:

'Flirting' என்பதனற்கு சிலர் கொச்சையாய் தவறான அர்த்தம் கொள்வதுண்டு. 'உண்மையான' அழகை தெளிவுபட, அழகுபட, ஆபாசமின்றி, மனதில் சலனமின்றி, அந்த அழகின் உரிமையாளருக்கு அதை தெளிவுபடுத்துதலே 'Flirting'. சொல்லப்போனால், 'Professional Communication Skills' என்ற பாடத்திட்டத்தில் 'Flirtation' என்பதனை ஒரு சாப்ட்டர்-ஆகவே அதை நிறுவியுள்ளனர். (சும்மா...அடிச்சி விடுவோம்!) இப்பேர்ப்பட்ட விசயத்தை நானும் அவ்வப்போது முயல்வதுண்டு. 'அழகு' எங்கு இருப்பினும் அதைப் புகழாது போனால், அந்த நாள் முழுவதும் பிஞ்சுப் போன செருப்பில் ஊக்கு போட்டு நடந்தது போலவே நெருடலாய் இருக்கும் எனக்கு. 

அது எங்கள் அபார்ட்மெண்ட் அருகே உள்ள பூங்கா. பெரும்பாலும் இந்தியர்கள் மட்டுமே அங்கு வருவர். ஓர் அழகான ஆண் தன்னுடன் இரு பிள்ளைகளை வைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தார். அவர் வயது எப்படியும் முப்பதை தாண்டி நான்கு வருடமேனும் ஆகியிருக்கக் கூடும். எளிதான, பகட்டு இல்லாத ஸ்டைல்  அவருக்கு. குழந்தைகளைச் சிரிக்க வைக்க அவர் செய்த சிறு சிறு சேஷ்டைகள் கூட ரசிக்கும்படியாய் இருந்தன. இதைப் புகழாதுப் போக எனக்கு மனம் வரவில்லை. அவர் பையன் என் பையனோடு விளையாடலானான். அவரது இன்னொரு பையன் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருக்க,

"ஹா.ஹா.திஸ் பாய் இஸ் ஸோ க் யூட்" என்றேன் அவனைக் காட்டி. 

"ஹா. தேங்க்ஸ் " என்றார் அளவாய் சிரித்து. 

"யுவர் ஸன் ரிஸம்பல்ஸ் ஜஸ்ட் லைக் யூ" என்றேன் மறைமுகமாய் என் கருத்தைத் தெளிவுப் படுத்திவிட. 

மனுஷன் சட்டென்று என்னைப் பார்த்து நெளிய நெளிய சிரித்து, 

"Sorry, that boy playing with your son is my son. This cute boy is my neighbor's son." 

என்று அவர் சொல்ல, "அசிங்கப் பட்டாண்டா சேகரு" என்றாகிற்று எனக்கு. அதுக்கு அப்புறம் ஸ்னோ-(Snow)க்கு கூட நான் அந்த பார்க் பக்கம் ஒதுங்கவே இல்லீங்க. 
-oOo-

Sunday, June 21, 2015

Last Vegas!

Paris-ன் மீது தீராத காதல் எனக்கு. Paris-னு பேப்பர்லே எழுதிக்குடுத்தாலே அதை கொஞ்ச நேரம் எடுத்து வச்சி அழகு பார்க்கும் பழக்கமும் உண்டு. ஒரு பாடாய் Paris தான் போக முடியாதே, லாஸ் வேகெஸ் ஆவது ட்ரை பண்ணுவோம் னு முடிவாகியது. அப்போ நீ கண்டிப்பா 'Last Vegas' பாரு-னு ஒரு கண்ணுக்குட்டி அறிவுறுத்த உறக்கம் தழுவாத ஓர் இரவினில் அப்படம் ஓட்டப்பட்டது. என்னுடன் வேலைப்பார்க்கும் ஒரு அமெரிக்க அம்மணியின் வயது 48. இதுவரை திருமணம் முடித்திராத இவருக்கு நல்லதொரு மணமகனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டுமென மற்ற அமெரிக்க தோழர்கள் அவருக்கு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்க, அப்பெண்மணியும் அவரது எதிர்கால 'காதலன்' எவ்வாறு இருக்க வேண்டுமென அவரது எதிர்ப்பார்ப்புகளையும், கனவுகளையும், கண்டீசன்களையும் சொல்ல சொல்ல, அச்சூழல் ரொம்பவே வித்தியாசமாய் இருந்தது நம்ம ஆட்களுக்கு. 

முப்பது வயதை தாண்டினாலே, வெள்ளை நரை வந்துருச்சோ-ன்னு கண்ணாடி-ல பார்த்து தலை நோண்டுவது நம்மில் பேர்வாதியான பெண்களின் செயல்கூற்று.  முப்பது வயதை தாண்டி இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான ஆண்களோ, "I am single, ready to gingle-mingle"ன்னு சுற்றிக் கொண்டிருக்க, எழுபது வயதைத் தொட்ட நான்கு 'வாலிபர்கள்'(இவர்களை கிழவர்கள்-ன்னு சொல்ல ஏனோ மனம் ஒன்றவில்லை) அழகாய் அடிக்கும் லூட்டிகளின் கதையே  'லாஸ்ட் வேகஸ்'. சொறி சொறி-ன்னு சொறியுற செண்டிமெண்ட்ஸ் எதுவும் வைக்காமல், எந்த ஒரு சின்ன கிளிஷே-கூட இல்லாமல், இதமாய் வருடி, மனம் விட்டு சிரிக்க வைக்கும்  காமெடி இப்படம் முழுக்க தழுவி ஓட, படம் பார்த்த முடித்த பின் நீங்கள் எவ்வயதினராய் இருப்பினும் அதைப்பற்றி நீங்கள் குஷியாய் உணர்வீர்கள். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ஐவருமே ஆஸ்கார் விருது வென்ற நடிகர்கள். ரொம்பவே இயல்பான நடிப்பு. 

தன நண்பனின் சவ அடக்கத்திற்கு சென்று அங்கே வைத்து தன் வயதில் பாதி கூடத் தொடாத ஒரு பெண்ணிடம் தன் காதலை சொல்லி, மணமுடிக்க சம்மதம் பெற்று, "My Brain cannot conceive how old my body is" என்று தனது முதுமைதனை மறுக்க முயல்கிறார் Billy (Michael Douglas). 

"Tell that girl how beautiful she is and not how sexy she is" என்று ஒரு இளவயது பையனுக்கு ஐடியா சொல்லி அவனும் அந்தப் பெண்ணை உஸார் செய்துவிட சந்தோசமாய் சிரிக்கிறார் Archie (Morgan Freeman). "யோவ், ஜாலியா போய் 'தப்பு' பண்ணிட்டு வா நீ"-என்று தன் மனைவி வாங்கிக் கொடுத்தவைகளை பையில் போட்டுக் கொண்டு வேகஸ் வந்த பின், தான் எண்ணியபடியே ஓர் யுவதி தன்னைத் தீண்டியும் கூட ஒரு கணம் தன் மனைவி நினைவுக்கு வந்த விட, அந்த பெண்ணை தள்ளி விட்டு விலகுகிறார் அக்மார்க் கணவர் Sam (Kevin Kline). இந்த நால்வரில் ரொம்பவே தெளிவு Paddy. இவர்களின் நடுவே வேகஸ்-இல் ஒரு Bar-இல் பாட்டு பாடும் பெண்ணாய் அறிகுகமாகி, இவர்களின் தோழியாய், காதல் கன்னியாய் வளம் வருகிறார் 63 வயதான Diana Boyle. Diane-வை இறுதியாய் வென்றது யார், இந்த நால்வர் நட்பில் வரும் நெருடல்கள் , Swim Suit Fashion Show-வில் இவர்கள் அடிக்கும் லூட்டிகள் என ஜாலியாய் நூறு நிமிடங்கள் கழிகின்றன. 

இந்த படம் வந்து இரண்டு வருசம் ஆகிடுச்சு. நீங்க இதுவரைக்கும் இதைப் பார்க்கலேனா கண்டிப்பா பாருங்க. இஃது அடியேனின் ரிகமண்டேசன். அப்படி ஏற்கனவே பாத்தாச்சுன்னா இன்னொரு தபா பாருங்க :) 

Wednesday, March 4, 2015

காதலும் கத்திரிக்காயும் (பகுதி 2)

(பகுதி 1 படிக்க இங்கே கிளிக் செய்க.)

அவனும் எவ்வளவு நேரம் தான் நல்லவன் போல் நடிப்பான் பாவம். மெல்ல அவள் தலை கோதி மென்மையாய் கேட்டான்,

"ஸோ தீப்ஷிகா, ஷால் வீ ஹெவ் இட்?"

அவளும் உடனே, "இப்போ தானே ரமேஷ் நூடுல்ஸ் சாப்டோம். யூ வான்ட் டு ஹாவ் எனிதிங் மோர்?" என்றாள் அவனை உற்று நோக்கி. 

"உன் மர்ற மண்டையிலே இடி விழ!" ரமேஷின் மைண்ட்வாய்ஸ் அந்த பெண்ணின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. அந்த பச்சை நிற ஸ்டீல் கட்டிலில் ஒருவர் மட்டுமே தோதாய் படுக்க முடியும். ஆதலால் இவ்விருவருக்கும் அது தோதுவாய் தான் போனது. 


"சூறாவளி போல போகுர இந்த இளமையை யாராச்சும் தடுக்க முடியுமா?" 

ஸம்திங் ஸம்திங் படம் ஓடிக் கொண்டிருந்தது அருகாமையில் இருந்த கம்ப்யூட்டரில். சுவற்றையொற்றி இருந்த தலையணையில் அவன் சாய்ந்து, அவன் நெஞ்சில் இவள் சாய்ந்து, இருவர் மேல் போர்வையும் சாய, படம் தொடர்ந்துக் கொண்டிருந்தது. 

"ஏன் இந்த வெண்டைக்காய் -க்கு லேடீஸ் ஃபிங்கர்ஸ்-ன்னு பேர் வச்சாங்க?"

"தெரியலையேமா"

தெரியலையேமா.....தெரியலையே............

"இல்லேடா...உன் கை விரல் எல்லாம் பாரேன். எவ்ளோ மெத்து மெத்து-னு இருக்கு. இந்த வெண்டைக்காய் -க்கு இனிமே  மேல்(Male) ஃபிங்கர்ஸ்-ன்னு பேர் வைக்கப் போறேன்!" அவன் கரங்களோடு தானும் தன் விரல்கள் கோர்த்தாள். 

"ம்ம்ம்... அப்புறம்?" அவளை அணைக்க வந்த அவன் கைதனை இதமாய் இழுத்துக் கொண்டாள். 

சூடான தேகம் கொண்டவன் போலும். குளிர் உடம்பு கொண்ட இவளுக்கு அவன் வெப்பம் ரொம்பவே இதமாய் தான் இருந்தது. காமமாவது, கருமமாவது அவன் அரவணைப்பில் மட்டுமே அம்புட்டு சுகம். எத்தனை மணித்துளிகளேனும்  அவன் மாரிலே படுத்துக்கிடக்கலாம் என்றிருந்தது அவளுக்கு. அவனுக்கு ஏனோ அவ்வளவு பொறுமை இருக்கவில்லை. அவன் கைகள் அவளை இருக்கமாய் அணைத்தன. மெல்ல அவன் கைகளை தடவினாள். 

"பிறந்த குழந்தையோட தலையைத் தொட்டுப் பாத்திருக்கியா நீ?"

"இப்ப அதுவாடி முக்கியம்?"

"இல்லேப்பா...உன் கை எவ்ளோ வழு வழு-ன்னு இருக்கு பாரேன்..."

"ரைட்டு விடு... அப்புறம்... " மொத்தமாய் பொறுமை இழந்திருந்தான் அந்த அழகன். 

"நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே..."பாடல் ஓடிக் கொண்டிருந்தது. செம டைம்மிங் தான் போலும். அவனது ஒவ்வொரு தீண்டலும் இவள் நரம்புகளில் இசை மீட்டிக் கொண்டிருந்தன. 

"நீ என்னை லவ் பண்ணுறியா ரமேஷ்?" அவள் கழுத்தில் கதை எழுதிக் கொண்டிருந்த அவன் இதழ்களை இதமாய் தாங்கியபடி கேட்டாள். 

"ச்சே ச்சே. அது வேற. இது வேற" சட்டென்று திகிலூட்டப்பட்டவனாக பதிலளித்தான். 

அது வரையில் அவளினுள் ஓடிக் கொண்டிருந்த ஓர் இனம் புரியா சுகமானது சட்டென்று சடன் (sudden) பிரேக் இட்டு நின்றது. 

"இவன் என்ன சொல்ல வர்றான்?" அவன் அரவணைப்பில் அதுவரையில் அவள் தேக நரம்புகளில் மட்டுமே ஓடிக் கொண்டிருந்த குருதி மெல்ல அவள் மூலைக்கும் இப்போது தான் பரவ ஆரம்பித்தது. 

ஆக ஆண்களில் சராசரி, நல்லவன், கெட்டவன் என்ற பேதம் இல்லை போலும். ஆண்கள் யாவரும் "அவனும் ஆம்பளை தானே" என்ற பொது வகையில் மட்டுமே சாருவர் போலும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத குழப்பம் அவளுக்கு. அவன் வெப்பமும் கட்டியணைத்தலும் அவளுக்கு வெகுவாய் பிடித்திருப்பினும் விலகிக் கொண்டனர் இருவரும். இவள் கட்டிலின் மேலும் அவன் தரைதனிலும் விழித்திருக்க.... அவள் சுதந்திரத்தை மதித்த ரமேஷ் கண இருட்டிலும் கண்ணியமானவனாய் தெரிந்தான் அவளுக்கு.இரவு இறுதியாய் இமை மூடியது. 

-oo0oo-

பி.கு: பார்ட் 2 வில் அஜால்ஸ் குஜால்ஸ் எதிர்பார்த்த கனிந்த நெஞ்சங்களுக்கு...(ங்கொய்யால...இங்க என்ன இங்க்லீஷ் படமா ஓடுது? ஓடுங்க எல்லாரும்!!! )

பி.பி.கு: நம்ம ரமேஷும் தீப்ஷிகாவும் ஆம்ஸ்‌டர்‌ட்யாம்(Amsterdam)-இல் பத்து வருசம் கழிச்சு மறுபடியும் மீட் பண்ணாங்களாம். அதை பார்ட் 3-லே எழுதலாம் இருக்கேன். உங்க வசதி எப்புடி? :) 

Wednesday, February 25, 2015

காதலும் கத்திரிக்காயும் (பகுதி 1)

நவம்பர் 2005, சிங்காரச் சென்னை. 

தீப்ஷிகா | 34-30-36. அப்படி ஒன்றும் பேரழகு என்றெல்லாம் சொல்லி விட முடியாது. மாநிறத்திற்கும் பழுப்பு நிறத்திற்கும் ஆவரேஜ் போட்டுப் பார்த்தால், வரும் விடையே இவள் நிறம் எனக் கொள்க. எண்ணையிடப்பட்டு சீவிய சுருட்டை முடி, வெள்ளந்திக் கண்கள், ஓயாது பேசும் இதழ்களுக்கு மேல் சின்ன மச்சம், நகர்ப்புற நவீனத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள எத்தனிக்கும் மண்வாசனை மாறாத 21 வயது பெண்.ரமேஷ் | "மலையாளப் பெண்ணழகு, மதுரை ஆணழகு" என்பர். உண்மையாகவே இருக்குமோ?! 5'7", 65 கிலோ எடை. கம்பீரமான குரல், அகன்ற தோல், ஆழ்ந்த கண்கள், குறும்பு சிரிப்பு, தீர யோசிக்கும் திறன், ஆணுக்கே உரித்தான திமிர், ஆரஞ்சு பழத்துண்டு போல உதடுகள், பிராமணத் தான் இன நிறம், ஆனாலும் முக்குலத்தோன் என்றே எண்ணத் தோன்றும், எந்த ஒரு சுமாரான பொண்ணுக்கும் சத்தியமாய் பிடித்துப் போகும் 22 வயது அழகன்.காலை மணி 10. 

ட்ரிங், ட்ரிங்...ட்ரிங்,ட்ரிங்...

"ஹெலோ"

"குட் மார்னிங் மிஸ்டர் ரமேஷ். ஐ ஆம் தீப்ஷிகா காலிங் யூ ஃப்ரம் சிட்டி பாங்க். திஸ் இச் இன் ரீகார்ட்ஸ் டு யுவர் க்ரெடிட் கார்ட் நம்பர் 9801 1089 9656 3898. மே ஐ டாக் டு யூ அபௌட் அந் ஆஃபர் ஆந் யுவர் கார்ட் ஸார்?"

"ஹே தீப்ஷிகா, ஐ ஆம் பிஸி நௌ. கேன் யூ கால் மீ இன் த ஈவிநிங்...ஆஃப்டர் 8?"

--o--0--o--

5 நாட்களுக்குப் பிறகு...

மாலை மணி 8:30

"மிஸ்டர் ரமேஷ், கேன் யூ ப்லீஸ் டெல் மீ இஃப் யூ கேன் டேக் திஸ் லோன் ஆர் நாட்?"  நொந்து போய் கேட்டாள். 

கிட்டத்தட்ட இருபது முறை பேசியிருப்பார்கள். அவனது இருபத்தைந்து கேள்விகளுக்கும் பத்து முறையேனும் பதில் சொல்லி இருப்பாள். 

அவன் அதே புன்சிரிப்பாய், "ஐ ஹெவ் டு ஸ்டில் ஸீ இஃப்....."

"இப்ப எடுப்பீங்களா இல்லியா? ஒரு மணி நேரமா பேசிக்கிட்டு இருக்கோம். வேற என்ன கோஸ்டின் கேக்கணும் நீங்க?" 

சத்தமிட்டு சிரித்தான். 

--o--0--o--இருவரும் தம் மொபைல் நம்பர்கள் பகிர்ந்தனர். பருவக் கோளாறோ, பார்வைக் கோளாறோ, ஓயாது இவர்கள் வருத்த கடலை காய்ந்து கருகிப்போனது. ஆங்காங்கே சந்தித்துக் கொண்டனர். சில பல மாதங்கள் நகர்ந்தன. தீப்ஷிகா-வுக்கு கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. கல்யாணத்திற்கு பத்து நாட்கள் இன்னும் இருந்தன. 

ஜுலை 2006, இரவு மணி 9:30

தீப்ஷிகா-வும் ரமேஷும் கடைசியாய்(!) ஒரு முறை சந்திக்கத் தீர்மானித்தனர். அடர்ந்த மழை, கத்திப்பாரா சிக்னல், ரமேஷின் பைக்-கில் அவனும் அவன் தோல் அணைத்து இவளும், மழையில் நடுங்கினர். 

அன்றிரவு ரமேஷின் வீட்டிலேயே கழியட்டும் என முடிவெடுக்கப்பட்டது. துவட்ட துண்டும், உடுத்த கருப்பு ஶார்ட்ஸ் மற்றும் நீல நிற டீ ஶர்ட்-டும், அவன் அவளுக்கு அளித்திருந்தான். அவன் வீட்டில் அவன் மட்டும் தான். அவன் மாதிரியே அழகான பெட்‌ரூம், சின்ன பால்கனி, அவனது அளவான சிரிப்பு போலவே அளவான ஒரு ஹால்...அம்சமாய் ஒரு குட்டி வீடு. 

அவள் தன் ஈரத்தலைதனைத் துவட்டியபடியே வெளிவந்த போது இரவு மணி 11. அவளுக்காக அவன் கிட்சநில் மாகி (Maggie) தயார் பண்ணிக் கொண்டிருந்தான். அவன் முதுகோடு மார் அழுந்தி அவனை உரிமையாய் அணைக்க அவள் சற்றே நினைத்திருப்பாள். இருவரும் காதல் பற்றி இதுவரைப் பேசிக்கொண்டதில்லை. இதற்குப் பெயர் காதலோ, கத்திரிக்காயோ, க்ரஸோ, கோகோ கோலாவோ, அவள் அதனைப் பற்றி அறிந்துருக்கவில்லை. ஆனால் பையன் தெளிவாய் தான் இருந்தான் போலும். பின்னர் சாப்பிடும்போதுதான் கவனித்தாள், அவன் இடது கைப்பழக்கம் கொண்டவனென்று. இன்னும் அழகாய் தெரிந்தான்.விஜய் டிவி இல் சூப்பர் சிங்கர் நிகில் மெத்யு என்று முடிவெடுக்கப்பட்டது. அவன் மீது சாய்ந்து டிவி பார்த்து முடித்திருந்த போது மணி 12:30. உறங்கலாமென்று முடிவெடுத்து இருவரும் பெட்‌ரூம் நகர்ந்தனர். ஒரே பெட்(Bed) தான். ஒரே தலையணை தான். அவனும் எவ்வளவு நேரம் தான் நல்லவன் போல் நடிப்பான் பாவம். மெல்ல அவள் தலை கோதி மென்மையாய் கேட்டான், 

"ஸோ தீப்ஷிகா, ஷால் வீ ஹெவ் இட்?"

அவளும் உடனே, "........................

--விரைவில் தொடரும்

(டிஸ்கி: இக்கதையை நான் உண்மை என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இல்லை பொய் என்று சொன்னால் அதைப் பற்றி நம்பாமல் தான் போவீர்களா? சுவாரஸ்யம் தொடர அடுத்த வாரம் வரை பொறுக்கவும்!)