Friday, June 24, 2016

கட்டிப்பிடித்தலும் முத்தமும்

அப்பா இறக்கும் போது எனக்கு சுமார் 15 வயது இருந்திருக்கலாம். அவன் இறக்கும் 5 நிமிடங்களுக்கு முன்னர் வரை அவன் மீது காலும் கையும் போட்டு தூங்கியதாய் தான் ஞாபகம். "மொப்ப மாதிரி வளந்திருக்கே...இன்னுமாடி அந்த ஆம்பள மேல கால் போட்டு தூங்குறே?" என்று பெரியம்மா கூட திட்டி இருக்கிறாள். "இந்தாரு...அது என் அப்பா. நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன், எப்பிடி வேணும்னாலும் தூங்குவேன். சொல்லிவை உங்கொக்கா கிட்ட" என்று அம்மாவை கன்னத்தில் குத்தி மிரட்டி இருப்பேன்.

என்னை முழுக்க முழுக்க ஆண் மகனாய் பாவித்து அழகு பார்த்தவன் அவன். "என் பொண்ணை கராத்தே கிளாசில் போடப் போறேன். என் பையனை பரதநாட்யம் கிளாசில் போடப் போறேன்" -ன்னு கூறிப் பெருமைபட்டுக் கொள்வான்.

"Be a Roman when you are in Rome"- அப்படின்னா என்னப்பா என்று கேட்டதற்கு, "எல்லாரும் கிணத்துல விழுந்தா, நீயும் விழணும்னு இல்ல. நீ வித்தியாசமாய் வாழ்ந்து காட்டலாம்-" ன்னு ஒரு புது கதையைக் கட்டுவான். குறும்புக்காரனும் கூட.

விஜய் மல்லையாவை அந்த காலத்திலேயே எனக்கு அறிமுகப்படுத்தியவன். "அட...சொர்கம் வைன்ஸ் (Wines) ரமணன் பொண்ணா நீ? " என்று யாராவது என்னை வினவினால் அதீத கோவம் வரும் எனக்கு. "எங்க அப்பா இப்போ ஹோட்டல் பிஸினஸ் தான் பண்ணுறாரு" என்று வெட்டிக் கொள்வேன். இப்போதெல்லாம் யாரேனும் என்னை இராஜபாளையத்து வீதிகளில் கண்டு கொண்டு அதே கேள்வியை மறுபடியும் கேட்க மாட்டார்களா என்று ஏங்குகிறேன்.

பஞ்சு, லிக்கர், நிலக்கரி, ஹோட்டல் என்று பற்பல பிஸினெஸ்களில் இறங்கி நட்டம் கண்ட போதுகூட கொஞ்சமும் கெத்து குறையாமல் கடைசி வரை ஹாஸ்யமாய் பேசியே அனைவரையும் சிரிக்க வைத்து அழகு பார்ப்பான்.

நன்கு இருட்டிய ஒரு மாலை வேளையில் நானும் அவனும் வீதியில் நடந்து கொண்டிருக்க, ஒரு பாட்டி அப்பாவைக் கட்டித் தழுவி, அவன் கன்னமெல்லாம் வாஞ்சையாய் தடவி, "வீட்டுக்கு வாங்க ராசா. %Beep% ஐயா நல்லா இருக்காஹலா?" என்று இன்னமும் என்னன்னவோ பேசி எனக்கும் அவருக்கும் கலர் சோடா வாங்கிக் கொடுத்து வழியனுப்பினார்.

"யாருப்பா இது?"

"இவளா...இவ தான் 40 வருஷத்துக்கு முன்னாடி $Beep$ அவுகளோட Keepu"

" Keep-னா?"

சட்டென ஏதோ நினைவு வந்தவனாய்..."Keep-னா...இவங்க நிறைய சோடா வச்சிருப்பாங்களா...அதனால தான் அவங்க Keep." ஏதோ உளறி பேச்சு மாற்றினான்.

அன்று எட்டு படித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த ஒலக அறிவெல்லாம் கொஞ்சம் கம்மி தான். அன்றிலிருந்து அந்த "Keep சோடா" பாட்டி என்னையெங்கு காணினும் "கலர் குடிக்கிறியா கண்ணு? ஏத்தா எங்க வீட்டுலே கலர் குடிச்சா உங்க அம்மா வையாது. செத்த இத்துனூண்டு குடிச்சிட்டு போ!" ன்னு உசுரு வாங்கிடும்.

அப்பா கண்ணை மூடி எத்தனையோ வருசமாச்சு. அவன் ஞாபகம் என்னவோ கூடிட்டே தான் போகுது. எனக்கு குழப்பம் -ன்னு வர்றப்போ ஐடியா குடுக்க அப்பா இல்லையே என்று தான் கண்ணீர் பீறிடும். "Gops. I am Ramana thaatha. I love you Gops" என்று என் பையன் தான் அப்போப்போ என்னைத் தட்டுவான். "எங்கப்பா மட்டுந்தாண்டா என்னை 'Gops'-னு கூப்டுவாரு" என்று நான் என்றோ சொன்னதை நல்லாவே மனதில் நிறுத்திக் கொண்டான் போலும். என்னில் முக்கால் வாசி வளர்ந்த என் குட்டி அப்பன் அவன்.

இப்போது அயர்ந்து தூங்குகிறான் பாவம். தாய் மாமனோடு விளையாடிய களைப்பு. அவன் மேல், அவனுக்கு வலிக்காதவாறு மெல்ல கால் போட்டு அவன் நெத்தியில் முத்தமிட்டு தூங்க வேண்டும் இந்நேரம்.

ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்...மகன்களைப் பெற்ற அம்மாக்களுக்கும் தெரியும் முத்தம் காமத்தைச் சார்ந்தது அன்று என்று.

இது எடுத்தது அக்டோபர் 2000-னு நினைக்கிறேன் 

3 comments:

  1. Enna yosichhaalum comments kku yethuvume type panna varala (alias mudiyala).."Manasu ganamaa irukkum poethu."

    ReplyDelete
  2. நினைவுகள்்.அர்்ப்்புதம்்.

    ReplyDelete
  3. We may treat you as a Princess but you always wanted to be a queen. There is a Arab proverb "No one is able to make the female a queen except her father". Sure your dad would be very proud of you.

    ReplyDelete